Monday, July 9, 2012


கர்த்தர் வருகிறார்



போதை உலகம் 
துளிர்த்தது 

காம விலங்குகள் 
வனவாசம் துறந்தன

வெருளி மனிதர்கள்
உயிர்தார்கள்
வெறுமைக்குள்
பொறுமை
இழந்தது பண்பாடு...??

கட்டுப்பாடுகள்
கடிவாளமுடைத்தன
அரவாணித்தன
ஆண்
உறவுகள் மலர்ந்தன ...!!!

மன்மதச் சந்தையில்
மாதவிகள்
மலிந்து போயினர்
கோவலர்கள்
சிவப்பு ஒளியின்
காவலராக...!!

பூமித்தாய்
பொருமினாள் ...
குப்பைகளின்
கூத்தாட்டத்தில்
இச்சைகள் இறைவசனம்
பேசின ...!!!

துருவடைந்து போன
இரும்பு மனங்கள்
உப்புச்
சத்தியாக்கிரகம்
நடத்தின...!!

பாவநியதிகளின்
பரம்பொருள்
மனிதம்....

இனி
விந்துக்களின்
கலவுடலில்
கலாசார சீரழிவு
நிறமூர்த்தம்

மீண்டும்
கர்த்தர் வருகிறார்
ஈன
ஜீவிகளின் 

அர்த்தமாக...!!!

Wednesday, July 4, 2012

மந்திர வலி உலகு (கருமை நிற அழகே!!!)


ஏ !
கருவாச்சி -உயிர்
திருகும்                                       
உன் கண் காதல் 
கருவாச்சு...!!

மழையாச்சு
துளித்...துளியாய்
பெண்மைத் 
தருவாச்சு..??

மலர்
வெடிச் செடியாய் 
பூத்தாச்சு 
உன் கைப்பிடியில் 
வேம்பும் 
கரும்பாச்சு...!! 

கார்மேகம் 
அழகாச்சு-உன்னால் 
கருப்பின் மவுசு 
மலையாச்சு...!!

துரு துரு
பற்சிரிப்பில்
துருவங்கள் இணைஞ்சாச்சு
துருப்பிடிக்கா 
உன் மனது 
பொன்னேறு விலையாச்சு 

கருங்குவளைப்
பூமேல்க் காதல் 
நிலவுக்கு 
வரலாச்சு ...!!!
அப்பத்தில்
மிளகைப் போல 
ஒட்டிக் கொஞ்சிக்
கட்டியாச்சு ...!!

திரள் குழல்
அழகில்
தீர்த்தம் ஆடியாச்சு -உன்
கரு பெரு
கண்களால் -இதயம் 
பொடியாச்சு ...!!

பிரம்பைக் 
குழம்பைப் போல் 
உன் சொற்கள் 
உறைப்பாச்சு...
இலுப்பம் பூவாய்
மௌனம் 
இனிச்சாச்சு ...!!

வரன் வேண்டா 
உனதழகே கள்ளி
எனக்காச்சு 
கரு நிறச்
சிலையழகே வள்ளி
நீ என்றாச்சு ..!!

மந்திர வலி 
உலகு 
கருமையிலே 
கானக்குயில் நீயாச்சு 
புன்னகை 
பூரிப்பு வழி உனதாச்சு...!!!



 





Monday, July 2, 2012

கத்தி உயிர் ஸ்பரிசம்


என்
விலா என்பிடை
உலாப் போ-நீ
நிலா 

கடல் ஆழம் 
உன் மனம் 
கவிதைத்
தாளம் ...!!!

சித்தன் நான்
உயிர்ப் 
பித்தம் தரு
பெரு முத்தம் 

நதி அசை 
அழகுப் பரிசல் 
பிரம்மன் 
கொடைப் பரிசில்...!!

மதி உயிர்ப்புப் 
புத்தி மதி
காதல் 
சாணக்கியாள்...

இடைக் 
கிரிவலம்
தெறிவில்
நிவாரணி க(ன்)னி

ஆகா
வார்த்தையில் 
ஆளும்
யுகம்...!!!

மௌன 
இனக் குவியல்
யெளவனச் 
சூடெற்றச் சமையல் 

பொன்நகை
வறுமை 
இடைத் தேசம் 
கோடை தரு
மார்கழி 
மாசம் ..!!

அசை 
ஆற்றின் நடை
அருவிக் கூந்தல்
நயாகரா 
வண்ண உலக(ம்)க்
கனா இரா...!!

ஊசி முனை
இடைத் 
தீக்காடு 
மழலை உரை 
குரல் 
குயில்ப் பேடு...!!

நா உமிழ்
எச்சில் 
தேவ அவிசு 
சொற்றிடும்
உன் முன் 
அழகின் பவிசு...

உயிர் உரம்
ஏற்றும்
புயல் மரம்...!!   

கத்தி உயிர்
ஸ்பரிசம் 
மேல் ஆடை
வழித்
தென்றல் ஆடும் 
சரசம்...!!!

Saturday, June 30, 2012


பெண்ணே 
கஸலிஷா...!!
வெள்ளை மனத் 
தூரிகை நீ!
வெட்கங்களை வரைகின்றாய் ..!!!


மழலை மதி


பிஞ்சு விரல்களிடை 
சொக்கித்தேன்-இவள்
கொஞ்சும் 
மொழிகளிடைக்
கொம்புத்தேன் ...

துள்ளிய பாதங்களிடை 
எனை மறந்து
கலந்தேன்
தொடர்ந்தேன் 
இவள் மின்னும் 
கண்களிடை ஒளியாகிக்
கவிழ்ந்தேன் 

குழந்தையும் 
தெய்வமும் ஒன்றாமே 
இறைவா
நீ இத்தனை அழகா?

மறந்தேன் 
எனை மழலையாய் 
உணர்ந்தேன் 
பரிசுத்த பற்சிரிப்பில் 
கறை எண்ணம்
கழுவித் தெளிந்தேன் ...!!!

புத்துயிர் கொண்டு 
இவளை அணைத்தேன் 
புது ஆன்மாவை 
எனக்குள் 
தெளித்தேன் 
அமிர்தாய்த் துளித்தேன் 
ஆனந்தமாய் 
அழுதேன் ...!!!

கடவுளானேன்
கவிஞனானேன் 
மென்மை உலகு 
அழகிய கனவு
இவள் 
விளையாட்டில் நான் 
பொம்மையானேன் 
விந்தையானேன் 

தொப்புள்கொடி
உறவாய்த் துளிர்த்தது 
இவள் ஜோதி 
தொட்டிலிலே நிலவாய் 
ஜொலித்தது 
இன்னும் என்ன செய்வேன் 

இவள்
பஞ்சுக் கரங்களிடைப் 
பதுங்கிச் 
சொர்க்கம் காண்பேன்..!!

    Thursday, June 28, 2012

    பெண்ணே
    கஸலிஷா
    நீ
    பேசும் மௌனம்
    மௌனமான கூச்சல் ...!!!

    காதல் சூட்சுமம்

    பாய்ந்தோடும் ஆற்றிடை
    மீன் தேடி
    மூழ்கி முக்குளித்த
    நீர்க்குருவி
    சிறகை வருடி உலர்த்தும்
    நிலை தெரிகிறது

    உன்
    பால் வதன
    நினைவாற்றில்
    அமிழ்ந்தெழுந்த -என்
    இறக்கை
    இதயம் நீவப்படுகிறது

    நீ
    மின்னல் கருவில்
    பிறந்து சிரிக்கிறாய்
    உன்
    பின்னல் உலகம்
    எனதாகிறது ...!!!

    நான்
    ரோஜா முட்களை
    சேமிக்கின்றேன் -நீ
    என்
    குருதி வாசனை
    குடிக்கின்றாய்

    சாஸ்திரக்காரி நீ
    வன்முறை
    படிக்கின்றாய்

    ஓர் இரவும்
    ஓர் பகலுமாய்
    கடக்கிறது என் வாழ்க்கை
    நீ
    அந்தி சாய்கின்றாய்...!!!

    நுனி தொடங்கி
    அடிவரை
    என்
    உயிர் மேய்கின்றாய்..!!!

    வாள்முனை தீட்டி
    செருக்களம் சேரும்
    சாகதனாய்
    பேனாமுனை
    தீட்டி
    உன் செயல் வளம்
    நாளும்
    கவிதை செய்கிறேன்     

    கல்லறையில்
    காவல் நிற்கிறாய் ...!!
    வீர மரணம்
    வினாவாகிறது
    காதல் சூட்சுமம்
    புரிகிறது...!!!

    Tuesday, June 26, 2012

    பிரிவென்ற
    ஒற்றை வார்த்தையின்
    குணம்...
    பிரித்தறியாச் சோகங்களின்
    ஜனனம்...!!!

    இரவுகளின் பத்தினி

    இருள்
    விழுங்கிக் கொப்பளித
    எச்சங்களில்
    மிச்சமானவள் நான் ...!!
    என் இரவுகள்
    பெறுமதியானவை..!!

    பிரிந்தழியாப்
    பொலித்தீன் பைகளால்
    பூஜிக்கப்பட்டவள்
    என் கறைபடிந்த
    மனவாசலில்
    சொர்க்கம் தேடிச்
    சொக்கி நிற்போர் பலர்..!!

    இன்ப ஏலக்
    கருப் பொருளில்
    இளமை கரைகிறது
    நான் மெத்தைகளின்
    சொத்தாகிப் போனேன் ...!!

    இரவுகளால்
    புதைக்கப்பட்டு
    பகல்பொழுதில்
    கண்களில் விதைக்கப்படும்
    கனவுகளில் எனைக்
    கண்ணகியாய் உணர்கிறேன்

    உணர்ச்சியற்றவள்
    முயற்சியற்றவளல்ல
    நான்......
    பருவமடையமுன்
    பந்தாடப்பட்டவள்

    முக்காடுகளுக்கு
    முழுமை
    விரதம் புனைந்திருக்கின்றேன்
    பெண்ணென்ற
    எண்ணம்
    பொய்த்துப்போய்
    நாளாச்சு...!!

    பணம் தந்து எனக்குப்
    படையலிட்டு
    ஈனப் பட்டம் சுமத்தும்
    ஆண்குலமே
    இனியாவது
    என் கல்லறையில்
    எழுதிடுங்கள் -மறக்காமல்
    இவள்
    இரவுகளின் பத்தினி என்று...!!!

    Sunday, June 24, 2012

    உன் அன்னையோ
    ஒரு தடவை

    நானோ
    லட்சம் தடவை
    உன்னைக் கவிதைகளாய்ப்
    பெறுகின்றேன்...!!!

    உப்புச் சுவை

    இங்கு யதார்த்த
    மெட்டுக்கள்

    கள்ளிச் செடியில் பால்
    ஒட்டிக் கிடக்கிறது
    இலட்சியம்
    பூக்கள்
    புண்படுகின்றன...!!

    பின்னிய சிலந்தி வலை
    மத்தியில் நான்
    செய்யப்படுகின்றேன் ..!!!

    என் கற்பனை
    கடலாகிறது
    சுனாமியாகிறது
    மது பருக்கிக் கொண்டிருந்தேன்
    மரணத்திற்கு

    குவளைகளில்
    குழந்தையாகிச்
    சேமிக்கப்படுகின்றேன்

    வஞ்சகங்களால்
    சேவிக்கப்படுகின்றேன்

    வாழ்வியல்
    சோதனைச் சரித்திரத்தில்
    என்
    இறுதி அத்தியாயம்

    நடுநிசிப்
    பிரசவ வேதனை
    துடிக்கிறது இரவு

    மெல்ல மெல்ல
    என் தலை வெளிக்கிறது
    இருளில் என் ஜனனம்

    நான் என்ற ஒருவன்

    மயான காண்டம்
    எனக்காய்
    புதிதாய் ...

    நிசப்தமான
    கருவறையில்
    தெய்வமாய்...!!!
    பாவப் பெட்டலங்களால்
    அபிசேகிக்கப்பட்டிருந்தேன்

    வானர
    மத நெறியில்
    எனக்குமோர்
    விரத நீதி

    கொப்பூழ் நாண்
    செலுத்துகையில்
    என்னுள்
    வித்தாகிப் போன
    பித்துணர்வுகள்

    கேவல வினாக்களின்
    கேள்விக் குறியானேன்..??

    கவரிகளின்
    ரோமம் களையப்படுகிறது
    நிர்வாணத்தின்
    உச்ச நிலை
    உணர்ந்தேன் ..!!

    இருளிகளின்
    இரவல்க்
    கணவனானேன்
    வெட்கச் சிறைகள்
    வழிவிட்டன ..

    இரு நிழல்கள்
    தொடர்ந்தன
    தன்னைக் கெட்டவன்
    என்றது
    அதிலொன்று

    நான் என்ற
    ஒருவன்
    நரகப்பிரவேசத்திற்கு
    தயாராகின்றான்..!!

    குருதி ஓவியங்கள்

    அறுபட்டு 
    நாட்களாகி 
    சீழ் புதைந்து செயலிழந்த 
    கைகளோரம்
    மரண ரேகை 
    நீண்டூர்ந்து ஓடிய நொடியில் ..!!
     
    செல் உடைத்துத் 
    துளையிட்டு 
    குருதிக் கறைபடிந்த 
    சுவர்வழி வீழ்ந்த 
    ஞாயிற்றுக் கீற்றுக்கள் 
    சொர்க்க நரகக் 
    கலவி நிலை உணர்த்தின...!!!
     
    சப்பாத்து ஓசையில் 
    அடிக்கடி கிழிந்த 
    நெஞ்சை 
    மீளக் கிழித்து  
    யமன் என்னைச் 
    சங்கரிக்கப் பார்க்கின்றான் 

    இரா 
    நீண்டு போனது 
    அங்கேயோர்
    அவளைப் பெண் உடல்
    அநாதரவாக -அவள்
    பிதுக்கப்பட்ட மார்புகளில்
    பிளந்து வீழ்ந்த
    நரம்புவழி சொட்டிய
    குருதிச் சொட்டுக்களை
    பாலென நினைத்துப்
    பருகுமவள் பெண் சிசு ...!!!

    மறுதிசையில் ஓர்
    பள்ளிச் சிறுமி
    பருவமடையாதவள்
    பல ஆண் ஆயுதங்களால்
    வெறி கொண்டு
    சிதைக்கப்பட்டிருந்தாள்
    பிணமான பின்னும்..

    ஆண்டவனுக்கு
    ஆயிரங் கண் என்றவனை
    கொலை
    வெறியோடு நிந்தித்தேன்
    ஓர் கண் கூட நமக்காய்த்
    திறக்காத
    பொழுதுகளில் ...\

    அப்பா
    பசிக்கிறது...!!
    இன்னும் எனில்
    நம்பிக்கையிழக்கா
    என் மகனின்
    வெள்ளையாடைகள்
    கொடியில்
    காற்றில் ஆடின ..!!

    தொலைவில்
    மணல் வெளியில்
    ஏதுமறியாப்
    பிஞ்சுக் கரமொன்று
    மணலில்
    புதர் உருவம் வரைகின்றது???